Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

விருப்பத் தலைப்பு

03 Mar 2022 9:45 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures babusasidharan

கவிஞர் கா. பாபுசசிதரன்

என் விருப்ப தலைப்பில் பாடவந்தேன்
அந்த தலைப்பில்
வேறு ஒருவர் பாடிக்கொண்டிருந்தார்

என் விருப்ப தலைப்பில் எழுத அமர்ந்தேன்
அந்த தலைப்பில்
வேறு ஒருவர் எழுதி முடித்திருந்தார்…

இருந்த விருப்பத் தலைப்பைத்
தூக்கி எறிந்துவிட்டு - வேறொரு
விருப்பத் தலைப்பில்
எழுத தொடங்கினேன்…

*
கவிஞனிடம்
உன் விருப்பத் தலைப்பு
எதுவென்று கேட்டேன்
"காதல்" என்றான்

காதலரிடம்
உங்கள் விருப்பத் தலைப்பு
எதுவென்று கேட்டேன்
"முத்தம்" என்றனர்

வியாபாரியிடம்
உன் விருப்பத் தலைப்பு
எதுவென்று கேட்டேன்
"லாபம்" என்றான்

வழிப்போக்கனிடம்
உன் விருப்பத் தலைப்பு
எதுவென்று கேட்டேன்
"பயணம்" என்றான்…

விலைமகளிடம்
உன் விருப்பத் தலைப்பு
எதுவென்று கேட்டேன்
"விடுதலை" என்றாள்…

பித்தனிடம்
உன் விருப்பத் தலைப்பு
எதுவென்று கேட்டேன்
"மகிழ்ச்சி" என்றான்…

சாகக்கிடப்பவனிடம்
உன் விருப்பத் தலைப்பு
எதுவென்று கேட்டேன்
"மரணம்" என்றான்…

எல்லா விருப்பத்திற்கும்
ஒரு தலைப்பு இருக்கிறது
எல்லா தலைப்பிற்கும்
ஒரு விருப்பம் இருக்கிறது

*
விருப்பத்தை வைத்துக்கொண்டு
தலைப்பிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது
"வாழ்க்கை…"

தலைப்பை வைத்துக் கொண்டு
விருப்பத்தோடு வாழநினைக்கிறது
"வசதி…"

தலைப்பும் இல்லாமல்
விருப்பும் இல்லாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறது
"விரக்தி…"
*
"சிலுவை சுமப்பவர்களே…"
என்ற விருப்பத் தலைப்பில்
ஒருவர் கவிதை பாடினார்
கேட்டுக்முடித்ததும்
அவர் சிலுவையை
எல்லோரும்
சுமக்கத் தொடங்கினார்கள்…

"புத்தனின் ஆசை…"
என்ற விருப்பத் தலைப்பில்
ஒருவர் கதை சொன்னார்
கதை முடிந்ததும்
புத்தருக்கும் சேர்த்தே எல்லோரும்
ஆசைப்பட்டு கொண்டிருந்தார்கள்…

"நான் கடவுள் இல்லை…"
என்ற விருப்பத் தலைப்பில்
ஒருவர் கட்டுரை வாசித்தார்
அவர் வாசிக்க முடித்ததும்
அனைவரும் அவரை
வழிபட தொடங்கினார்கள்

பிறகென்ன.,
கவிதைகளும்… கதைகளும்…
கட்டுரைகளும்…
தங்களது விருப்பத்திற்கு
மனிதர்களை
எழுத தொடங்கின…
*
அவர்கள் விருப்பத்திற்கு
அவர்களின் விருப்பத் தலைப்பை
எழுதினார்கள்
"நாம்" பிறந்தோம்

நம் விருப்பத்திற்கு
நமது விருப்பத் தலைப்பை
எழுதினோம்
"இவர்கள்" பிறந்தார்கள்

தினம் தினம்
நம்மை வாசிக்க
ஒரு விருப்பத் தலைப்பை
எழுதி வைத்திருக்கின்றோம்
மனைவியாக… கணவனாக…

தினம் தினம்
நாம் வாசிக்க
விருப்பத் தலைப்புகளை
எழுதி வைத்திருக்கின்றோம்
மகனாக… மகளாக…

நாம் எழுதியதோ…
நமக்கு எழுதப்பட்டதோ…
எல்லாம்
நம்மையே வாசித்துக்
கொண்டிருக்கின்றன.

கவனமாய் இருங்கள்
உங்கள் விருப்பத்தலைப்பில்
"மட்டும்" நீங்கள் வாசியுங்கள்
வேறொருவரது தலைப்பை
வாசித்து விடாதீர்கள்

*
அவள் விருப்பத்திற்கு
அவன் தலைப்பிட்டால்
அது "காதலி…"

அவன் விருப்பத்திற்கு
அவள் தலைப்பிட்டால்
அது "மனைவி…"

இரண்டுமே வாழ்வின்
விருப்பத் திருப்பங்கள்
கலைப்பில்லா தலைப்புகள்

விருப்பமில்லாத தலைப்பும்
தலைப்பில்லாத விருப்பமும்
நம்மை
முதலில் திண்டாடவிட்டு
பின் கொண்டாடிக் களிக்கிறது

*
சிலர் .,
தலைப்பை எழுதுவதற்காக
விருப்பத்தை
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

சிலர்
விருப்பத்தை வாங்குவதற்காகத்
தலைப்பை
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

நாம்
விற்பதையும் வாங்குவதையும் எழுதி
விருப்பத் தலைப்பென்று
பெயரிட்டுக்கொண்டோம்

*
இப்பொழுதெல்லாம்.,
விருப்பத்தையும் தொலைத்துவிட்டு
தலைப்பையும் தொலைத்துவிட்டு
சொற்களை வைத்துக்கொண்டு
சுற்றி கொண்டிருக்கிறேன் நான்…

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
வடலூர் ஜெகன்
வடலூர் ஜெகன்
2 years ago

விருப்ப தலைப்பு கவி விருப்பத்துடன் பூத்துக்குலுங்குகிறது மணத்துடன்..

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092540
Users Today : 7
Total Users : 92540
Views Today : 11
Total views : 410211
Who's Online : 0
Your IP Address : 3.144.48.3

Archives (முந்தைய செய்திகள்)