15 May 2021 6:47 amFeatured

-சதாசிவம் பிரபாகர், நாகர்கோவில்
ஒரு மழை நாள் இரவின்,
இலை புகுந்த விளக்கின் ஒளியில்,
அந்தக் காரை பெயர்ந்த சுவற்றில்
நானே மறந்து போன,
அருவமாய் நின்ற
என் நிழலது கண்டேன்…
உடம்பல்லதாய் உயிரிருந்தும்,
உடம்பிற்கிட்ட பெயரால்
எனை அழைக்க…
இருவரும் அளாவளாவியபோது
சுவற்றின் சிறு குழிகளுக்குள்
சிதறி வடியும் மழைத்துளியாய்
அந்நியமாய் சிதைந்து போனேன்.
ஒட்டி நின்று உரசிப் பார்த்தபோது
அதன் உயரமும் கம்பீரமும்
என் கனவும் நினைவுமான
எதிர்மறை விகிதங்களாய்.
குயவன் வனைந்த
சுட்ட கலமாய் நானும்
சேறும் சகதியுமாய்
மெய்யாய் என் நிழலும்
நிற்கக் கண்டு பதற்றத்தில்
சுவற்றிலேயே விட்டுவிட்டேன் .
என்றாவது ஒருநாள்,
முக்காலத்தும்
நானும், என் நிழலும்
உண்மையாய் இருப்பின்
சுவற்றில் விட்ட
என் நிழலை என்னோடு
எடுத்துச் செல்லவேண்டும்






Users Today : 15
Total Users : 108828
Views Today : 15
Total views : 436864
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150
கவிஞர் பிரபாகர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.