Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அசுரன் சினிமா விமர்சனம்

07 Oct 2019 5:28 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

அசுரன்... ஒருத்தன் இல்ல, ரெண்டு பேர்!
-நன்றி நக்கீரன்

"உனக்கு அவன் செய்யுறதெல்லாம், நீ அவனுக்குக் கீழ இருக்கனு அவன் நம்புற வரைக்கும்தான்..." என்ற இடத்தில் தொடங்கி "நம்ம கிட்ட காசிருந்தா புடுங்கிக்குவானுவ, நிலமிருந்தா எடுத்துக்குவானுவ, படிப்ப மட்டும் ஒன்னும் செய்ய முடியாது, படிச்சு அதிகாரத்துக்கு வா, அதிகாரத்துக்கு வந்து அவன் உனக்கு செஞ்சத நீ யாருக்கும் நடக்கவிடாம பாத்துக்க" என்னும் இடத்துக்கு வருகிற ஒரு மனிதனின் கதை. இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான சிவசாமியின் வாழ்க்கை 'அசுரன்'.

திருநெல்வேலி அருகே உள்ள கிராமங்களில் 80களில் நடக்கும் கதை. எந்த இடத்திலும் ஊர் பெயரையோ காலகட்டத்தையோ வெளிப்படையாக சொல்லாமல் காட்சிகளால் அதை உணரவைத்தது படத்தின் ஒரு சோறு. சிவசாமியின் பதினாறு வயது மகன் சிதம்பரம் ஒரு கொலையை செய்துவிட, குடும்பத்துடன் ஊரை விட்டு தப்பிக்கிறார்கள். மனைவி, மகள் ஒரு பக்கம் போக கொலை செய்த மகனுக்கு ஆபத்தில்லாமல் எப்படியாவது சரணடைய வேண்டுமென்று இன்னொரு பக்கம் செல்கிறார் சிவசாமி. அந்தக் கொலைக்குக் காரணம் என்ன, 'சண்டை வேண்டாம் வேண்டாம்' என தவிர்க்கும் சிவசாமியின் பின்னணி என்ன என்பதை உண்மையாகவே ரத்தமும் சதையும் வெக்கையும் புழுதியுமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை படமாக்கத் தேர்ந்தெடுத்த முதல் அடியிலிருந்து வன்மத்தைத் தூண்டாத தீர்வை பாடமாகச் சொன்ன க்ளைமாக்ஸ் வரை ஒவ்வொரு அடிக்கும் வெற்றிமாறனை பாராட்டலாம். பனிரெண்டு ஆண்டுகளில் ஐந்து படங்கள் இயக்கியிருப்பது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் பெருமிதம் கொள்ளக்கூடிய படங்கள். அதில் நான்கு படங்களில் வெற்றிமாறனுடன் தனுஷ் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் கலை புரிதலும் நட்பும் படங்களாக வெளிவருகின்றன என்று சொல்லலாம். அந்த வரிசையில் 'அசுரன்', தனுஷ் - வெற்றிமாறன் இருவரின் அடுத்த பெரிய உயரமாக இருக்கிறது. நாற்பது வயதுக்கு மேலான, வெளியே பொறுப்பும் உள்ளே நெருப்பும் கொண்ட பக்குவமான தந்தையாகவும் வீரம், வேகம் நிறைந்த இளைஞனாகவும் இரண்டு பருவங்களிலும் சிவசாமியாக நம் மனதில் அழுத்தமாகப் பதிகிறார் நடிப்பு அசுரன் தனுஷ். நாவலின் சாரம் குறையாமல் அதே நேரம் சுவாரசியத்துக்காகக் காரம் சேர்த்து கதை நடக்கும் நிலத்தின் தன்மை, வெப்பம், புழுதி, வாழ்க்கை ஆகியவற்றை நாம் உணரும்படி உண்மைக்கு நெருக்கமாகப் படமாக்கி ஒரு தரமான திரைப்படத்தைத் தந்திருக்கும் வெற்றிமாறன் இன்னொரு அசுரன். சரியான வட்டார மொழி, பன்றி வேட்டை, ஒளிந்து கொள்ளச் செல்லும் காடு என கதை நடக்கும் களத்தை உண்மைக்கு நெருக்கமாக்க வெற்றிமாறன் எடுக்கும் முயற்சிகள் படத்தை நமக்கு இன்னும் நெருக்கமாக்குகின்றன. கலைப்புலி தாணுவின் தயாரிப்பு வரிசையில் இன்னொரு பெருமையாக இணைந்திருக்கிறது 'அசுரன்'.

வர்க்கம், சாதி இரண்டின் அடிப்படையிலான ஏற்ற தாழ்வு, நில அரசியல், பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்ட சூழல் என மிக தீவிரமான ஒரு பிரச்சனையை தீவிரம் குறையாத சுவாரசியமான ரிவென்ஜ் கதையில் சினிமாவாக்கி இருக்கிறார்கள். படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெரும் பலம். வெற்றிமாறனின் 'காஸ்டிங்' லிஸ்ட்டில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் பலரும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், எந்தப் பழைய படத்தையும் நினைவுபடுத்தாமல் இருப்பது அவர்களது சிறப்பு. லிஸ்ட்டில் இல்லாத புதியவர்களான கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் இருவரும் புதிது என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் புகுந்து விளையாடுகிறார்கள் (சிறு டப்பிங் குறைபாடுகள் தவிர்த்து). பிரகாஷ் ராஜ், பசுபதி, 'ஆடுகளம்' நரேன், பவன், சுப்ரமணியம் சிவா, அம்மு அபிராமி, ஏ.வெங்கடேஷ், நிதிஷ் வீரா என ஒவ்வொருவரும் பெரிதோ சிறிதோ, தங்கள் பாத்திரங்களை சரியாகப் பதியச் செய்திருக்கிறார்கள். அதிலும் பசுபதி, ஒரு கால இடைவெளிக்குப் பிறகு நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேல், இங்கிலிஷ் பேசும் இடம், சர்ப்ரைஸ் நகைச்சுவை. சிவசாமியின் மனைவி பச்சையம்மாளாக நடிகை மஞ்சு வாரியர். இந்தக் கூட்டத்தில் இவர் மட்டும் சற்றே நெருடலாகத் தெரிந்தாலும் தனது சிறப்பான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார்.

எல்லா வார்த்தையிலும் 'லே' சேர்த்துக்கொள்ளும் வழக்கமான தமிழ் சினிமாவின் திருநெல்வேலி வட்டார வழக்காக இல்லாமல் உண்மையான மொழியை நமக்குக் கொண்டு வந்த சுகா - வெற்றிமாறன் வசனங்களும் சுகா அளித்துள்ள வசனப்பயிற்சியும் படத்தின் நேர்மையை இன்னும் வலுப்படுத்தியுள்ளன. உடை, கலை இரண்டும் கதையின் காலகட்டத்தை மிக சிறப்பாக வடித்திருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவில் கதையின் களம் நம் முன் நிஜமாக விரிகிறது, சண்டைக் காட்சிகள் நம்மையும் பதற வைக்கின்றன. படம் நெடுக படர்ந்திருக்கும் அந்த இருட்டு நமக்கும் மெல்லிய பதற்றத்தை உண்டாக்குகிறது. கதையை சுவாரசியமாக சொல்ல ஒளிப்பதிவு மிக சிறப்பாகப் பயன்பட்டிருக்கிறது. இசை, ஜி.வி.பிரகாஷ். இடைவேளை சண்டைக் காட்சியில் ஒலிக்கும் இசை, வணிகப் படங்களுக்கேற்ற ஒரு சிறந்த ஹீரோயிச இசை. ரசிகர்களை குதூகலிக்கச் செய்கிறது. காட்சிகளின் விறுவிறுப்பிலும் பரபரப்பிலும் இசைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. பாடல்கள் புதிதாக இல்லையென்றாலும் ரசிக்கவைக்கும் ரகம். ராமரின் படத்தொகுப்பில் சண்டைக் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன.
பீட்டர் ஹேனின் 'ரா'வான சண்டை அமைப்பு தாக்குதலையும் தாக்கத்தையும்  அதிகப்படுத்தியிருக்கிறது.

படம் நெடுக தெறிக்கும் ரத்தத்துடன் நிகழும் வன்முறை காட்சிகளுக்கு கூடுதல் மனப்பக்குவம் தேவை. இரண்டாம் பாதியில் ஃபிளாஷ்பேக் பகுதி சற்றே நீளம். கொலை... மறுபக்கம் கொலை... பதில் கொலை... என செல்வது அதிர்ச்சி, சற்றே அயர்ச்சி. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி 'அசுரன்' பெரிய முயற்சி. வெற்றியும் பெற்றுவிட்டது. வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியிடம் இன்னும் பெரிதாக எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.  

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092526
Users Today : 0
Total Users : 92526
Views Today :
Total views : 410187
Who's Online : 0
Your IP Address : 18.188.29.73

Archives (முந்தைய செய்திகள்)