06 Dec 2022 11:35 amFeatured

கவிஞர் இரா. சண்முகம், பரணம்பேடு.
அறியாமை இருளகற்றி
பிஞ்சு உள்ளங்களில்
அறிவு ஒளியேற்ற
தமிழன்னைத்தாள் பணிந்து
அறிவுத்தீபம் ஏந்துவோம்.
மூட பழக்கவழக்கங்கள்
எவ்வுருவில் இருந்தாலும்
அடியோடு வேரறுத்து
பகுத்தறியும் பண்புக்காய்
அறிவுத்தீபம் ஏந்துவோம்.
சுற்றுச்சூழல் பராமரிப்பு
உடற்கல்வி வாழ்க்கைக்கல்வி
கற்றுத்தரும் பாடங்களை
ஏற்கும் வகையினிலே
அறிவுத்தீபம் ஏந்துவோம்.
வேலையில்லாத் திண்டாட்டம்
அறவே நீங்கிட
வேலைநிறுத்தப் போராட்டத்தின்
குறைகள் களைந்திட
உழைப்பின் உயர்வதனை
மதித்துப் போற்றிட
அறிவுத்தீபம் ஏந்துவோம்.
வேளாண்மைத் துறையினிலே
செயற்கை ஆக்ரிமிப்பகற்றி
வளமான விளைவுக்கு
இயற்கையை நாடிட
அறிவுத்தீபம் ஏந்துவோம்.
பேராசைப் பூதங்கள்
பலிகொண்ட மரங்களை
சீராய்ப் பன்மடங்காய்
மீண்டும் விதைத்திட
அறிவுத்தீபம் ஏந்துவோம்.
இயற்கையை வெல்ல
செயற்கை நினைத்ததால்
இயல்புகள் மாறிய
பேரிடர் வென்றிட
அறிவுத்தீபம் ஏந்துவோம்.
வன்முறை கும்பல்களின்
கொலைக் கொள்ளைக் கற்பழிப்பு
கொன்று குவித்திடும்
தீவிரவாத அரக்கத்தனம்
அனைத்தையும் அடியோடு
குழித்தோண்டிப் புதைத்திட
அறிவுத்தீபம் ஏந்துவோம்.
எங்கும்ஊழல் எதிலும்ஊழல்
ஊழல்ஊற்றின் ஊழித்தாண்டவம்
ஏழைகள் வாழ்வோ
நிராசையின் விளிம்பினில்
நேர்க்கொண்ட நிலைமைக்காய்
அறிவுத்தீபம் ஏற்றுவோம்.
மொழி இனம் மதத்தால்
மக்கள் வேறுபட்டு வாழ்ந்திடினும்
வேற்றுமையில் ஒற்றுமையைக்
கட்டமைத்துக் கொண்டாட
அறிவுத்தீபம் ஏந்துவோம்.
நாட்டுப் பற்றில்
மனிதப் பண்பில்
மனிதநேயம் மலர்ந்து
சுற்றமும் நட்புமாய்
அன்பு தழைத்தோங்க
அறிவுத்தீபம் ஏந்துவோம்






Users Today : 65
Total Users : 105934
Views Today : 103
Total views : 433519
Who's Online : 1
Your IP Address : 18.97.14.90
அருமை