02 Feb 2021 9:35 amFeatured

-பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்
தலைவர், தமிழ் எழுத்தாளர் மன்றம் - மகாராட்டிரா
வண்ணமலர்ச் செண்டொன்று வாசமலர் பொழிந்ததென
நெஞ்சமெலாம் இதமளிக்க நந்நெறிகள் தந்ததென
தென்னகத்துச் சுடரொளியாய் செந்தமிழின் கதிர்வீச்சாய்
இன்முகத்துப் பார்வையிலே இதயத்துள் நுழைந்ததென
கண்ணிமைக்கும் நேரத்தில் கருத்துமழை பொழிந்ததென
கற்கண்டாய் தேன்பாகாய் கன்னித்தமிழ் சொல்லாலே
ஒளிக்கீற்றாய் எழுந்திட்டு ஒப்பற்று நின்றதென
ஓரணியில் பலபேரை ஒருசேரக் கொணர்ந்திட்ட
மூன்றெழுத்து வித்தகனாம் முன்னத்தி ஏரெனவே
இனமதத்துச் சாயமதை இடித்துரைத்த நன்மகனாம்
காற்றடித்த திசைகளிலே காட்சிகளின் வழிதனிலே
காண்கின்ற யாவருமே கன்னல்தமிழ்ப் பிறப்பென்று
கற்றோரும் கல்லாரும் கருணைவழி செல்வதற்கு
தடையனைத்தும் உடைக்கின்ற தகமைசார் தோழரென
அன்புடைத்த அண்ணாவே ஆற்றல்மிகு செந்நாவே
செந்தமிழின் எழுச்சிக்கு செம்மையாய் பலவற்றை
செதுக்கிட்ட சிற்பியென சொல்கின்ற மக்களினம்
காலங்கள் கடந்தாலும் கரையாத நினைவுகளாய்
நெஞ்சோரம் நிறுத்திட்டு நெகிழ்கின்ற உறவுகளாய்
ஆண்டுகள் ஐம்பதையும் அழுதழுதே கடந்தனரே!
அரசியலின் அரிச்சுவடி அறியாரும் அறிவதற்கு
அச்சாணி போலாகி அழகான அடிகளையே
கற்பிக்கும் ஆசானாய் காலமெலாம் தொழுதிடவே
கருத்துகளைச் சுவடாக்கி கருவூலம் தந்தவனே
பெரியாரின் பேராற்றல் பெருகிடவே உரையாற்றி
பைந்தமிழின் சிறப்போடு பண்பொழுக பகுத்தறிவை
பாமரரரும் அறிவதற்கு பாடமெனச் சொல்லிட்டு
காலத்தின் இறுதிவரை தலைவரெனக் கலைஞருக்கு
அன்பாலே பாலமிட்டு அடிநாதம் ஆனதனால்
அடுத்தடுத்து வந்துதித்த அன்புசார் தலைமையுமே
அன்னைக்கு நிகராக ஆழ்மனத்துச் சிந்தையென
போட்டுவைத்த பாதையிலே பயணமிடும் செயல்தனிலே
தொன்மைக்குச் சான்றாக தொய்வற்ற இலக்கியத்தை
கரைபடிந்த பல்லுடைத்து கரகரத்த குரலுடைத்து
செல்கின்ற திசையெல்லாம் செறிவாக விதைப்பித்து
பொருளுடைத்த பெருமானும் பொருளற்றுத் திரிவோனும்
களந்தனிலே அரசியலை கற்றுணரும் தகைமைதனை
காலங்கள் கடந்தாலும் காணுகின்ற வியப்பாக
வரலாற்று நிகழ்வாக வந்துதித்த வல்லமையாம்
பேரறிஞர் புன்னகைக்கு புவிதனிலே ஈடுண்டோ!






Users Today : 26
Total Users : 106472
Views Today : 30
Total views : 434199
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37