Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நீங்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகலாம்

14 Jul 2024 1:09 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures ias 13

S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)

(13) சரியான அணுகுமுறையும் தொடர் முயற்சியும் நம் வெற்றியை உறுதி செய்யும்

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறப் பல லட்சம் பேர் ஆண்டுதோறும் முயற்சி செய்கிறார்கள். எல்லோருடைய முயற்சியும் வெற்றி பெறுவதில்லை. ஆனால் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் திட்டமிட்டுக் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

பயிற்சி மையங்கள்:

இத்தேர்வுக்குத் தாமாகப் படிப்போரும் உள்ளனர். பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிலுவோரும் உள்ளனர், பொதுவாக இதற்குத் தயார் செய்வோர் தம்மைப்போல இதே தேர்வுக்குப் பயிலும் சிலருடனாவது தொடர்பு கொண்டிருக்க வேண்டியது மிகவும் தேவையான ஒன்று. மற்றவர்கள் எவ்வாறு பயில்கிறார்கள் என்று அறிவதற்கும் தமக்குப் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்குவதற்கும் இது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித்தரும்.

பயிற்சி மையங்களில் சேர்வதும், சேராதிருப்பதும் தங்களின் பொருளாதார நிலைமை. பிற வசதிகளின் அடிப்படையில் சிந்தித்து முடிவு செய்ய வேண்டிய ஒன்று. பயிற்சி மையங்கள். தேர்வுக்கு பயில்வோருக்கு பல வகையிலும் வழிகாட்டி உதவுகின்றன. இது தவிர இவற்றில் சேர்வதால், நம்மைப் போல இத்தேர்வுக்காகத் தயார் செய்வோர் பலரின் தொடர்பும் கிடைக்கும். பலவகையிலும் பயனுடையதாக அமையும்.

பயிற்சி மையங்கள் என்று பார்த்தோமேயானால் அரசுப் பயிற்சி மையங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. தனியார் பயிற்சி மையங்களும் ஆங்காங்கே உள்ளன. தமிழகத்தில் இருப்பதை விட அதிக எண்ணிக்கையில் டெல்லியில் பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றில் நேரடியாகவோ தபால் மூலமாகவோ பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்யும் ஒவ்வொருவரும் தாங்கள் எவ்வாறு படித்தால் வெற்றி பெறமுடியும் என்று நம்புகிறார்களோ அவ்வகையைப் பின்பற்றுவது நல்லது. பயிற்சி மையங்களில் சேர்வதால் பயன் இருக்கும் என்று நம்பினால் சேரலாம். நாமாகப் படிப்பதுதான் உகந்தது என்று எண்ணினால் அவ்வாறு படிக்கலாம். எப்படியாயினும் படித்துச் சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்பதில் கருத்தாக இருக்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை அறிவுப் பூர்வமாக சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி உறுதி.
டெல்லிக்குச் செல்வது அவசியமா?

பல ஆண்டுகளாக டெல்லி மாநகர் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயார் செய்வோருக்கு பயிற்சிக்களமாகத் திகழ்கிறது. அங்கிருந்து தயார் செய்யும் பலர் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே டெல்லிக்குச் சென்று படித்தால்தான் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. டெல்லி மாநகர் எந்த வகையில் இத்தேர்வுக்குத் தயார் செய்பவர்களுக்கு உதவுகிறது என்றால்,

  • டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு அதிகம்.
  • இத்தேர்வுக்குத் தயார் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
  • இத்தேர்வுக்குப் பயன்படும் புத்தகங்கள் எளிதில் விலைக்குக் கிடைக்கிறது.
  • இத்தேர்வுக்கு வழிகாட்டி உதவும் தனியார் பயிற்சி மையங்களும் டெல்லியில் அதிகம்

புதுடெல்லியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள். இவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு பற்றிய விபரம் தெரிந்திருக்கிறது. இவர்களது பிள்ளைகளும் இத்தேர்வு பற்றிய முழு விபரமும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். இதைப் பற்றிய விழிப்புணர்வு அங்கு அதிகமாக இருப்பதால் அதை எழுதுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வரவழைத்து விற்கும் புத்தக விற்பனையாளர்களும் அதிகம். தேவையைக் கருதி பலருக்குப் பயன்படும் வகையில் பயிற்சி மையங்களும் பலரால் தொடங்கப்பட்டுச் சிறப்புடன் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் கூட சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாகிவிட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றி விடுகிறது.

டெல்லியில் தங்கி இத்தேர்வுக்காக தயார் செய்வது மட்டுமே சிறப்பு என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். நாம் வசிக்கும் பகுதியில் ஐஏ.எஸ். அதிகாரியாகிவிட வேண்டும் என்று முழு ஆர்வத்துடன் கடினமாக உழைக்கக் கூடியவர்கள் சிலர் இருந்து, அதற்குத் தேவையான புத்தகங்களும் வழிகாட்டுதலும் கிடைத்துவிட்டால். டெல்லிக்குச் செல்வதால் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை இங்கேயே பெறலாம். அதன்பிறகு டெல்லியிலிருந்து தயார் செய்வதும் ஒன்றுதான். நாம் வசிக்கும் பகுதியிலிருந்து தயார் செய்வதும் ஒன்றுதான்.

விடா முயற்சி:-

"முயற்சி திருவினை ஆக்கும்'
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"

விடா முயற்சியே வெற்றிக்கு வழி. இந்த உண்மையை சிவில் சர்விஸ் தேர்வு எழுத விரும்புவோர் முழுமையாக மனத்திற்கொள்ள வேண்டும். தொடர்ந்த முயற்சி இல்லாவிட்டால் இத்தேர்வில் வெற்றி பெறுவது ஈடினம்.

தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்வு பெற்றவர்களின் விபரம் வெளிவரும்வரை சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிவிடுகிறது. தொடக்கநிலைத்தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு என்று தோற்றுவிட்டால் கூட மீண்டும் தொடக்க நிலைத் தேர்வும் முதன்மை எழுத்துத் தேர்வும் எழுதி வெற்றி பெற்றுத்தான் அடுத்தமுறை நேர்முகத்தேர்வுக்குச் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இப்படிப்பட்ட தொடர் தேர்வுகளுக்கு விடாமுயற்சியும் கடினமாக உழைக்கக்கூடிய வைராக்கியமும் ஒவ்வொருவருக்கும் தேவை.

தோல்வியைக் கண்டு துவண்டுவிடுவது உகந்ததன்று, தோல்வி ஏற்பட்டாலும் அதனை ஒரு சவாலாக ஏற்று அதனையே படிப்பினையாகவும் கொண்டு முயல்பவர்களுக்கே இத்தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமாகும்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.- குறள்.

பெற்ற கல்வியின் உற்ற பயன்:

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பது வாழ்வில் வெற்றி பெற்றோரின் கூற்று, எல்லா முயற்சியிலும் வெற்றி பெற வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் வெற்றியும் தோல்வியும் நம்மால் முழுமையாக செய்யத்தக்கதாக நிர்ணயம் இல்லை இதைத் தீர்மானிக்கக்கூடியதையே தெய்வச் செயல். விதி, அதிர்ஷ்டம் என்று பலகும் பலவாறாகக் குறிப்பிடுகிறோம்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக அயராது உழைக்கிறோம். ஆனாலும் வெற்றி பெற முடியவில்லையென்றால் என்ன செய்வது என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே வெற்றியை எதிர்பார்த்து உழைக்கும் யாவரும், தோல்வி கிட்டவும் வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து தோல்வியை எதிர்கொள்ளும் துணிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தோல்வி அடைந்தால் துவளும் நிலை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் அதனை ஒரு சவாலாக எடுத்துச் செயல்படலாம். அதிக ஆர்வத்தின் காரணமாக இத்தேர்வில் வெற்றி பெற்றால்தான் சிறப்பு. தோல்வி அடைந்தால் இந்தப் பிறவி எடுத்துப் பயனே இல்லை என்று எண்ணி மனச்சோர்வு கொள்ள வேண்டாம்.

சட்டம், மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில் நுடபக் கல்வி கற்றோருக்கு இத்தேர்வில் தோல்வி அடைந்தாலும் மாற்று வழி பற்றிய கவலை அதிகம் இருக்காது. ஏற்கனவே பணியில் இருப்போர் இத்தேர்வில் வெற்றி பெற்றால் தம் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம். தோல்வியுற்றால் தம் பணியில் தொடராலம். சிவில் சர்வீஸ் தேர்வில் தோற்றவர்கள் பலரும் இத்தேர்வுக்குத் தயார் செய்கையில் பெற்ற அறிவினைக் கொண்டு மற்றும் உள்ள அரசு மற்றும் தனியார் பணிகளுக்கான தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்று பணியில் அமர்ந்ததோடின்றி அந்தப் பணியில் திறம்படச் செயலாற்றி தற்பெயரும் பெற்றுள்ளனர்.

வெற்றிக்காக முயற்சி செய்வோம், தோல்வி கிட்டினாலும் கவலை வேண்டாம். கற்ற கல்வி ஒரு நாளும் பயனற்றுப் போகாது.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
- குறள்
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று சிவில் சர்விஸ் தேர்வுக்காக உழைத்த உழைப்பும் அதனால் கிடைத்த அறிவும் வாழ்வில் எல்லா நிலைகளிலும நமக்குப் பயன் தருவதாக அமையும்.

நிறைவுரை:

ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றி அறிய விரும்புவோருக்கும் அதற்காக முயல விழைவோருக்கும் அவர்களது பெற்றோருக்கும் பயன்படும் வகையில் விழிப்புணர்வு தொடராக இந்த கட்டுரைத் தொடர் அமையும் என்று முதல் தொடரான அறிமுகவுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

கட்டுரைத் தொடர் எப்படி இருக்கிறது?
உங்கள் எதிர்பார்ப்பு நிறைவு பெற்றதா?
உங்களுக்கு ஏற்பட்ட ஐயங்கள் யாவை?
ஐ.ஏ.எஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு பெற முடிந்ததா?

என்பதை நான் நேரடியாக அறிய முடியவில்லை. இருப்பினும் எந்தத் தரப்பினராக இருந்தாலும்,இந்தப் புத்தகத்திலிருந்து பல செய்திகளை புதிதாக அறிந்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத ஆற்றலுள்ள பலரும் இத்தேர்வை எழுத முயற்சியே செய்யாமல் விட்டுவிடுவதற்கு அடிப்படைக் காரணம், மாணாக்கர் அவர்தம், பெற்றோர் உட்பட பலருக்கும் இத்தேர்வு பற்றிய செய்திகள் தெரியாமையே ஆகும். இத்தேர்வு பற்றிச் சரியாக அறியாத பலருக்கும் இந்த தொடர் கட்டுரைகள் ஒரு கைவிளக்காக வழிகாட்டி உதவும் என்பது திண்ணம்.

ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய விழிப்புணர்வைப் பெற இக்கட்டுரைத் தொடர் பயன்படும். ஆனால் ஒருவரது சொந்த முயற்சியே அவரை ஐ.ஏ.எஸ். அதிகாரியாகும் தகுதியுள்ளவராக உருவாக்க முடியும்

ஒரு செயலைச் செய்து முடிக்க அடிப்படைத்தேவை அச்செயலை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற அறிவு. ஆனால் செய்து முடிக்கத் துணைபுரிவது 'மனத்திண்மை (Will Power) ஒன்றே. ஒருவரிடம் உள்ள மனத்திண்மை (வைராக்கியம்) வெற்றிக்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் செய்யத்தூண்டும். இதன் மூலம் தடைகள் எவை வந்தாலும் எதிர்கொண்டு முயன்று வெற்றி பெற முடியும். இதனால்தான்,

வினைத்திட்பம் என்ப ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிறி
என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவேண்டுமாயின் தொடர்ந்து விடாப்பிடியாக உழைத்து அதிமான செய்திகளை அறிய வேண்டும். செய்திகளை அறிவது மட்டுமல்ல, அறிந்தவற்றைப் பல கோணங்களில் ஆராய்ந்து தெளிவு பெறுதலும் வேண்டும். தெரிந்து தெளிந்த பின்புதான் தேர்வை எதிர்கொண்டு சிறப்பாக வெற்றி பெற முடியும்.

சரியான அணுகுமுறையில், தேவையான நேரத்தில், முழுமையான பயிற்சி செய்வோருக்கே வெற்றி கிட்டுகிறது. இதனை உணர்ந்து, சிறிதும் தளர்ச்சி இன்றி உழைத்து வெற்றி பெற வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம் (முற்றும்…

S.D.சுந்தரேசன் IAS
email: sdsundaresan@yahoo.in

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
விஜய விவேஷ்குமார்
விஜய விவேஷ்குமார்
1 year ago

வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா. தேர்வில் வெற்றி பெற நான் என்னென்ன பாடங்களை படிக்க படிக்க வேண்டும்?!

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

104920
Users Today : 12
Total Users : 104920
Views Today : 13
Total views : 432081
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111

Archives (முந்தைய செய்திகள்)