Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மனதின் மடல்

08 Jul 2021 11:53 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

(சிறுகதை)                                                                                       
தமிழ் முகில் இரஜகை நிலவன்

என்ன செய்வதென்றே தெரியவில்லை மாலதிக்கு. வாசித்த கடிதத்தை கைப்பையினுள் வைத்து விட்டு, தன் கையிலே மருதாணி போட்டு விட்டு கைகழுவச் சென்ற தோழிகள் வரக் காத்திருந்தாள்.

விடிந்தால் அமெரிக்க மாப்பிள்ளை ஆனந்திற்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம்…. இந்த நேரத்தில் ஆறு மாதமாக காணாமற்போன விஜய் திடீரென்று வந்து … எத்தனையோ சொல்லிவிட்டு… கையிலே ”என்னை… என் நிலைமையை விவரித்திருக்கிறேன்.

அலை பேசி… நண்பர்கள்… ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்று கோபப்படுவாய்… அந்த அளவிற்கு  கோபப்படாவிட்டால் நீ… நீயாக இருக்க மாட்டாய் என எனக்குத் தெரியும்.. மனதை கொட்டியிருக்கிறேன். ஏற்பதும்… எறிவதும் உன் விருப்பம்” என்று கையில் கொடுத்து விட்டுச் சென்ற மடலை திரும்பப் பிரித்தாள்.

உள்ளே வந்த தோழி ராணி, “ உங்க அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. சீக்கிரம் வா” என்று சொல்லி விட்டு மாலதி ஏதோ சொல்ல வந்ததைப் பார்த்து, ”அங்கே மாப்பிள்ளை வீட்டுக் காரங்க நீ நாளைக்கு நிகழ்ச்சிக்கு உடுப்பதற்கு சேல கொண்டு வந்திருக்காங்க். அவங்க கூட சாப்பிடக் கூப்பிடுறாங்க…” என்று சொல்லி விட்டு ஓடினாள்.

மடலை விரித்தாள். விஜய் தான் மனக்கண் முன்னால் வந்தான்.

என் உயிரில் கலந்தவளுக்கு,
என்ன சொல்வதென்றே புரியவில்லை..உன்னிடம் சொல்லி விட்டுத்தான் ஊருக்குப் போனேன். அங்கே தாய் மாமா வீட்டில் ஏறக்குறைய சிறை வைக்கப்பட்டேன். அவர் மகள் தேவியைத்தான் மணந்து கொள்ள வேண்டுமென்று அம்மா வந்து சாப்பாடு தரும் போதெல்லாம் சொல்லி விட்டுப் போனாள்.

கையிலிருந்த அலைபேசி பிடுங்கப் பட்டு, அடிக்கடி தேவியும் அம்மாவும் தவிர யாரையும் பார்க்க முடியவில்லை

தேவியிடம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் ,” எல்லாம் கல்யாணத்துக்கு பொறவு சரியாப் போயிரும். மொதல்ல என்னக் கட்டிக்கிறேண்ணு சொல்லு… கல்யாணத்துக்கான வேலைய நான் பார்த்துக்கிறேன்.” பிடிவாதம் பிடித்தாள்.

என் அம்மாவோ வாயில்லாப் பூச்சி… என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இன்று தான் எப்படியோ தப்பித்து சென்னைக்கு வந்தேன். நல்லவேளை அலுவலகத்தில் பிரச்சினை இல்லை. திரும்பவும் வேலையில் சேர்ந்து விட்டேன். உன்னைப் பார்க்க பல முயற்சிகள்.. உன் அலைபேசி எண் தெரியாமல் தவித்து, இறுதியாக இம்மடலின் முயற்சி…

எத்தனை முறை வாழ்க்கையை வாழ்க்கையோடு வாழக்கற்று கொள்ளணும்ணு பேசித்தீர்த்திருப்போம். ஆனால் எந்த மனிதனுக்கும் இந்த மாதிரி சூழ்நிலை வரக்கூடாது…

கண்டிப்பாக என்னைத் தேடியிருப்பாய்.. எத்தனை காதல் வசனங்கள் பேசி என்னை விழ வைத்தவள் நீ… காதல் என்றாலே காமம் என்று பேசித்திரிந்த எனக்கு.. அன்பை விலை கொடுத்து வாங்கித் தந்தவளல்லவா நீ…

ஆம்… எத்தனை நாட்கள்… எத்தனை ஆர்வங்கள்… எத்தனை அவமானங்களை விலை கொடுத்திருப்பாய் என் காதலை எனக்கே உணர்த்திட…. புரியாத உலகில் எவ்வளவு சஞ்சரித்தோம்.

வாழ்க்கையை வாழ்க்கையோடு வாழக்கற்று கொள்ளணும்ணு சில நேரங்களில் தேவியையே கட்டிகிட்டு தலை விதியே என்று இருந்து விடலாமென்று சிந்தித்த வேளைகளிலெல்லாம் உன் நிலா முகம் வந்து நின்று பரிதவித்து விட்டுப்போனது…  நான் …. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்திருப்பாய்  இது உன் வாழ்க்கையா… இல்லை .. நம் வாழ்க்கையா… முடிவு நீ என்ன எடுத்தாலும் அதை  ஒரு சூழ்நிலைக்கைதியாகவே ஏற்றுக் கொள்கிறேன்.

நீ கிடைத்தால் தப்பி வந்ததன் விடை கிடைக்கும் என் வாழ்விற்கு  நீ கிடைக்கவில்லை எனில் … கண்டிப்பாக ஒருவனை இப்படி அநியாயமாக விரட்டி விரட்டிக் காதலித்தோமே என்று மனதில் குற்ற உணர்வின்றி வாழ்க்கையை வாழ்க்கையோடு வாழக்கற்று கொள்ளணும்ணு பேசித்தீர்த்தபடி, வாழ்க்கையை வாழக்கற்று கொள்.  ஆனால் எந்த முடிவிற்கும் ஒரு விலை உண்டு.. உன் விலையின் அளவை தான் எதிர் நோக்குகிறேன்.

மறந்துவிடச்சொன்னால் கண்டிப்பாக இருவருக்குமே இனி பொய்யான் வாழ்க்கை என்பது உனக்கும் நன்றாகத் தெரியும். கீழே என் அலை பேசியின் எண்களை குறிப்பிட்டுள்ளேன்.

முடிந்தால்… முடிந்தால் என்ன முடிந்தால்… கண்டிப்பாக கூப்பிடு.

எந்த விலை என்றாலும் பேசி விட்டு நினைவுபடுத்துகிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே… த்தூ..என்று காறி உமிழ்ந்து விட்டு… நின்று பேசி ஜெயித்துக்காட்டு என்று சொன்னாயே…

ஆம் பேசி முடிவைச் சொல்.. இங்கு நீயும் நானும் மட்டும் தீவில் வாழ்வில்லை உனக்கும் பெற்றோர் உறவினர், எனக்கும் சுற்றம் எல்லாம் உண்டு… ஆனால் மவுனமாக இருந்து விடாதே…. அது வலியை விட உன்னைப்பற்றிய எண்ணங்களில்  துர் நாற்றம் அடிக்க வைத்த விடும்.

இதயம் திறந்து விட்டேன். இனி முடிவு காலத்தின் கைகளில்..கண்டிப்பாக ஒரு முறை  நம் எதிகாலம் என்னவென்று… நீ… நான்..என்றா…? நாம் என்றா? என்பதை சொல்லிவிடு.

உன் …என்ன சொல்லத்தெரியவில்லை
விஜய்.

மடலை மடித்து விட்டு கண்ணீரைத் துடைத்து விட்டு, கீழே வந்தவள், “அம்மா. நீங்கள் சாப்பிடுங்கள். என் தோழி ஊரிலிருந்து வந்திருக்கிறாள். இதோ அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்”
என்று சொல்லி விட்டு அலைபேசியும் கைப்பையும் எடுத்துக் கொண்டு சாலைக்கு வந்தவள், “ஆட்டோ” எனக் கூப்பிட்டு ஏறி அமர்ந்து…
“ நாம் வாழப் போகிறோம்” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு “முகவரி அனுப்புங்கள்” என்றாள் விஜயிடம் அலைபேசியில் பேசிக்கொண்டே…

You already voted!
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Suresh Rajagopal
Suresh Rajagopal
4 years ago

சின்னஞ்சிறு, சீறிய கதை

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

104924
Users Today : 16
Total Users : 104924
Views Today : 21
Total views : 432089
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111

Archives (முந்தைய செய்திகள்)