14 Apr 2020 11:21 amFeatured

-பாவரசு வதிலை பிரதாபன்
அண்ணல் போற்றிய அண்ணல் உம்மை
அன்பிற் கேங்கும் அவனி போற்றும் !
அமுங்கிக் கிடந்த அன்பு நெஞ்சம்
ஆற்றல் கொண்டுன் அடிதனில் நடக்கும் !!
நடக்கும் பாதை நமக்கில்லை என்ற
நச்சு விதையை நசுங்கச் செய்து !
நன் மதிப்புடனே நாட்டார் மதிக்க
நாளும் உழைத்த நாயகன் நீயே !!
நீயும் வாழ்வில் நிம்மதி இழந்து
நீசச் சொல்லடி நாளும் அடைந் தாய் !
நேயம் மறந்த நாட்டார் செயலால்
நொறுங்கிய மனத்துடன் நிமிர்ந்தே நின்றாய்!!
நின்றவுன் வழியோ நந்நெறி தனிலே
நிறைவாய் கற்று நிலத்தோர் போற்ற !
நல்லோர் வியக்கும் நடுநிலை உணர்வால்
நாட்டில் சட்ட நல்விதி படைத்தாய் !!
படைத்தோர் பெயரால் பாவம் செய்த
பற்பல குழுக்கள் பலரது செயலால் !
பணிந்தவன் குனிந்தவன் பண்பினை விளக்கி
பயமற வாழும் பட்டயம் தந்தாய் !!
தந்தவுன் அன்பை தரணியர் காண
தாழ்ந்தவன் மனதோ தங்க நிலமென !
தயக்க மில்லா தன்மையை சொல்லி
தாவும் புலியெனும் தகுதியைச் சொன்னாய் !!
சொன்னவுன் வார்த்தை சுடரென ஒளிர்ந்து
செயலில் தெரியும் சிந்தையை தந்தே !
சிதறி யோடும் சிறப்புற் றோனை
சீரிய வழிதனில் செதுக்கிச் சென்றாய் !!
சென்றாய் எனினும் செதுக்கிய சிற்பம்
சிதைந்து போகா செயலாய் அமைய !
அணைத்துச் செல்லும் அன்பு வழியை
அதுவெனக் காட்டி அக்கரை போனாய்
போனவுன் வழியோ புத்தன் கண்டது
போதி மரத்தோன் புன்னகை கொண் டது !
தன் மானத்தோன் தகுதியை இழக்க
தாய்மை நெஞ்சுடன் அள்ளிக் கொண்டது !!
கொண்டோர் மனத்தை கவ்விக் கொள்ளவே
கொடுமைகள் சிறிதாய் குறைந்து போனது !
எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவே
ஏங்கிய விழிகள் எழுச்சி கடந்தது !!
கடந்த காலம் கனவாய்ப் போக
காணும் காலம் கற்கண் டாக!
இனம் மதம் இகழ்ந்ததை நீயோ
இடித்துச் சொல்லி இல்லாது செய்தாய் !!
செய்தவை இருளைச் சாடிய விளக்கு
செந்நீர் வியர்வை செதுக்கிய கணக்கு !
உழைக்கும் வர்க்கம் உயர்வு காண
உள்ளன் போடு உரமாய் ஆனாய் !!
ஆனவை அனைத்தும் அன்பால் மாறி
ஆக்கிய பணிகள் அகிலம் வியக்க !
அடிமைத் தனத்தை அடியோ தழித்த
அண்ணல் உந்தன் அரிய பிறப்பு !!
பிறந்தவன் வாழ்வில் பிழையினைக் காணும்
பித்தர் பலரின் புரட்டுத் தனத்தை !
வித்தகன் நீயோ விளக்கிய விதத்தால்
உற்றவன் வணங்கும் உருவெடுத் திட்டாய் !!
தீட்டெனச் சொல்லிய தீநாக் கினரை
திறத்தால் மாற்றிய திருமகன் முயற்சி !
தாய்த்திரு நாட்டைத் தகர்ப்பதற் கல்ல
தாய்நீ எமக்கும் தாயெனச் சொல்ல !!!






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37