26 Apr 2019 12:35 amFeatured
கர்நாடகா மாநில ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின். இவர் தேர்தல் பார்வையாளராக ஒடிசா மாநிலத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.
கடந்த 17ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஒரிசா மாநிலம் சம்பல்பூர் வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இவர் சோதனை நடத்தினார். விதிகளை மீறி தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் செயல்பட்டார் என்றும், ஒழுங்கீனமாக தனது பணியை மேற்கொண்டார் என்றும் காரணம் கூறி தேர்தல் ஆணையம் அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மீண்டும் அவரை கர்நாடக மாநிலத்துக்கே திருப்பி அனுப்பியது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து முகமது மோசின் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்களின் வாகனங்களை சோதனையிடக் கூடாது என்று விதிகள் எதுவும் இல்லை. பிரதமரின் ஹெலிகாப்டரில் பெட்டிகள் இறக்கப்பட்டு வேறு வாகனத்துக்கு மாற்றப்பட்டதாக தேர்தல் பார்வையாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் சோதனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் நடக்கும் நேரத்தில், இது போன்ற தகவல் கிடைத்தால் யாராக இருந்தாலும் சோதனை மேற்கொள்ள வேண்டியது தேர்தல் பார்வையாளரின் கடமை. ஆனால் அதிகாரி முகமது மோசின், பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக காரணம் கூறி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு தடை விதிப்பதாக தனது உத்தரவில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.