Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அட்டைப்படக் கவிதை – சிறுகதை

05 Feb 2023 10:12 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures prabhakar short story

-சதாசிவம் பிரபாகர், நாகர்கோவில்

பனைமரமாய் நிறைந்து கிடக்கும், கிராமமும், நகரமும் இல்லாத அந்தக் கடற்கரை ஊரில், என்ன அதிசயமோ தெரியவில்லை, அந்தக் காலத்திலேயே படித்தவர்கள் அதிகம் உண்டு. கொழும்பில் வேலை செய்தவர்களும், தொழில் செய்தவர்களும் உண்டென்பதாலும், கிறிஸ்தவ மிஸனரிகளின் ஆதிக்கம் இருந்தது என்பவையெல்லாம் காரணங்களாக கூட இருக்கலாம். 60களிலேயே, இஞ்சினியரிங் பட்டதாரிகள், டாக்டர்கள் கொண்ட ஊர்.

பாஸ்கர் துரு துருவென்று இருப்பான். கமுக்கமான சேட்டைக்காரன். சின்ன வயதில் பள்ளியில் படிக்கும் பொழுது நன்றாக படித்ததால், வகுப்பில் முதல் மாணவனாக எல்லாம் வருவதுண்டு. அந்த பள்ளியில் , யார் மாதப்பரிட்சையில் முதல் மாணவனாக வருகிறார்களோ அவர்களையே, வகுப்பு மாணவர் தலைவராக நியமித்து விடுவார்கள். ஆதலால், அங்கு தலைவர் பதவி ஒன்றும் நிரந்தரம் அல்ல. இதற்காகவே, இரண்டாம் , மூன்றாம் ரேங்க் வாங்கும் மாணவர்களை உசுப்பேத்தும், ஒரு கூட்டம் டெல்லி அரசியல் ரேஞ்சுக்கு நடக்கும். தலைவனாக முடியவில்லை என்றாலும், தலைவனோடு இருப்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை. தற்காப்பு.

அந்த மாதம், தன்னுடைய ஆறாம் வகுப்பின் எதிரிகளையெல்லாம், தோற்கடித்து பாஸ்கர் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினான். அவனுடைய அப்பா, எழுபதுகளின் தந்தையை முழுமையாக பிரதிபலிப்பார். செகண்ட் ரேங்க் வாங்கினாலே கருக்கு மட்டையால் தோலை உரித்து விடுவார். பின்னாளில், பாஸ்கருக்கு படிப்பின் மீது விருப்பம் இல்லாமல் போனதற்கு இது கூட ஒரு காரணமாய்த் தோன்றியது. அது வேறு கதை.

இப்படித்தான், அன்று வகுப்புத் தலைவர் என்பதால் ஆசிரியர் வருவதற்கு முன்பு , பேசியவர்களின் பெயரை எல்லாம் எழுதிக் கொண்டிருந்தான் பாஸ்கர். இது போன்ற தருணங்களில்தான் தம்முடைய சில, பல பழைய கணக்குகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அன்றும் அப்படித்தான். தனக்கு பிடிக்காதவர்கள் எவராவது சத்தமாக மூச்சு விடுகிறார்களா என்ற ரேஞ்சுக்கு புதருக்குள் மூக்கை நுளைக்கும் நரி போல பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ பழைய மிட்டாய் பிரச்சினை. கண்டிப்பாக, தன்னுடைய அத்தை பையன் ராஜேஷ் மாட்டுவான் என்று எதிர் பார்த்த போது, அவனுக்கே அவனுக்கென அது நடந்தது.

ராஜேஷுக்கு பக்கத்தில், ஒல்லிய தேகமும் கொஞ்சம் பெரிய தலையாகவும் இருந்த சக்கரியா. ராஜேஷிடம் பேசுவதற்கு பயந்து, டெஸ்கின் அடியோடு ஏதோ ஒரு பிட் பேப்பரைக் கொடுத்தான் . ராஜேஷும் அதை நைசாக வாங்கினான் இதுதான் சாக்கு என்று அவர்கள் ரெண்டு பெயரையும் எழுதி வைத்துவிட்டான் பாஸ்கர். ராஜேஷ் சிக்கிய மகிழ்ச்சியில், அதற்கு முன்னாடி எழுதிய பெயரை எல்லாம் அடித்து விட்டதாக கூட ஞாபகம்.

க்ளாஸ் டீச்சர் வந்தவுடன், அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்தவுடன் தன்னுடைய இருப்பை நிலை நிறுத்துவதற்காக, இந்த பேசினவன் பேர் லிஸ்ட்தான் கேட்பார்கள். அதைத் தரும்பொழுது ஏற்படும் பிரம்பின் வாசம், சொல்லி மாளாது. பாஸ்கர் லிஸ்டைக் கொடுத்தவுடன் மேடம் , ராஜேஷையும் சக்கரியாவையும் அருகில் வரச் சொன்னார்கள். அவனுக ரெண்டு பேருமே, எதோ சிலுவையில் அறைபடும் நியாயவாதி போல அழுது அடம் பிடித்தார்கள். அதிலும் மாப்ள ராஜேஷ் அழுவதை வேடிக்கைப் பார்ப்பது சூப்பரா இருக்கும். அவன் அழுவதற்கு முன்பே, அவன் உதடு அப்படித் துடிக்கும். பாஸ்கர் அவனுடைய கூட்டாளி ஸ்டாலின் எல்லாம், ராஜேஷை அழ விட்டு நெறய தடவை சிரித்திருக்கிறார்கள். ராஜேஷே, சில நேரம் அழுவதுற்கு முன்னால் தன்னுடைய உதட்ட பிடிச்சிக்கிட்ட சம்பவம் எல்லாம் கூட நடந்திருக்கு.

பாஸ்கருக்கும், அவன் அத்தை பையன் ராஜேஷுக்கும் அன்றைக்கு இருந்த பகை குறித்து பாவம் சக்கரியாவுக்கு ஒன்றும் தெரியாது. டீச்சர் கிட்ட தான் ஒன்னும் பன்னல என்று எவ்வளவோ முறையிட்ட போதும், அவன் வாங்கியிருந்த ரேங்க் அவனைக் காவு வாங்கி விட்டது. பின்னெ, ராஜேஷ் பாஸ்கருடைய சொந்தக்காரன் என்பதும் டீச்சருக்கு தெரியும் என்பதால் “ குற்றம், குற்றமே” எனும் மனு நீதிச் சோழனைப் போல் அவனைப் பார்த்தார்கள். வீட்டுக்குப் போனா , கண்டிப்பா இவன் அத்தை கிட்ட சொல்லி தனக்கு அடி விழும் என்பது உறுதி, என்பதால் இப்போதைக்கு ராஜேஷ் இங்கே அடி வாங்கட்டும் என்று விட்டு விட்டான் பாஸ்கர்.

சக்கரியா ஒரு போராளி போல பயங்கரமாக முறையிட்டுக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் , அவனுடைய நியாயக் குமுறல் டீச்சரை எரிச்சல் படுத்தியது. ”சரி அந்த பேப்பரைக் கொண்டு வா” என்றார்கள். சக்கரியா சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த பேப்பரை வெளியே எடுத்தான். அதில் “எந்த விசயம் வெளியே போனாலும் இந்த டெலிபோன் விசயம் வெளியே போகாது” என்று ஏதோ ஒரு சினிமா படத்தின் வசனம் எழுதி இருந்தது. டெலிபோன் என்னும் குறியீடை எல்லாம் சாதாரணமானவர்களால் அந்தக் காலகட்டத்தில் புரிந்து கொள்ள முடியாது.

டீச்சரும், சக்கரிய்யா எதோ வயதுக்கு மீறி, தப்பு, தப்பாய் எழுதி வைத்துள்ளான் என்று மேல் விசாரணைக்கு ஹெட்மாஸ்டெரிடம் அனுப்பி வைத்தார்கள். இதை பாஸ்கர் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. அவனுக்கு இப்போ ராஜேஷ் ஹெட்மாஸ்டரிடம் வாங்கப் போறான் என்பதில் ஒரு அற்ப பயம் கலந்த சந்தோசம். ஏன்னா, சாயந்திரம் வீட்டுக்கு போகனுமே. ஸ்டாலின் தன்னைப் பார்த்து கமுக்கமாக சிரிப்பதுபோல் தோன்றியது பாஸ்கருக்கு. ராஜேஷ் கண்டிப்பா ட்ரௌசர்ல போவான் என்பது அங்குள்ள அனைவருக்கும் தெரியும். போகும் போதே, ராஜேஷ், பாஸ்கர்கிட்ட சமாதான உடன்படிக்கைக்கு வந்தான். அதத்தான் பாஸ்கரும் எதிர் பார்த்தான். இப்போ, பிரச்சினை வேற மாதிரி போயாச்சு. ஹெட்மாஸ்டர் பயங்கரமான கோபக்காரரு, சவுக்கால அடிச்சா ரெண்டு அடிதான், சவுக்கு பிஞ்சிரும். இதுக்காகவே பள்ளிகூடத்திலெ சவுக்கு நட்டு வச்ச மாதிரி இருக்கும்.

அவர்கள் மூனு பேரும் ஹெட்மாஸ்டர் ரூம் நோக்கி நடந்தார்கள். ராஜேஷ் போகிற வழியில் முன்னெச்சிரிக்கையாக பாத்ரூம் போயிட்டு வந்தான். அது என்னவோ தெரியல்ல, அங்க போறதுக்கு முன்னாடியே அவர்கள் மூனு பேரும் சமாதானம் ஆகிவிட்டது போல் தெரிந்தது . ஒருவேளை இவ்வளவு பெரிய தண்டனையை அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை போலும்.

உள்ளே போனதும், சார் தனது பெரிய மீசையத் தடவிக் கொண்டே “ என்னல, என்ன நடந்துச்சி” என்றார். பாஸ்கர் சொல்ல ஆரம்பிக்கும் போதே ராஜேஷைப் பார்த்தான். ராஜேஷின் உதடு மேலும் கீழூம், துடிக்க ஆரம்பித்து விட்டது. தனக்கு வந்த சிரிப்பை அட்க்கிக் கொண்டே தன்னால் முடிந்தவரைக் கதையைக் கோர்வையாக சொல்ல முயற்சித்தான் பாஸ்கர். முண்டக்கண்ணை உருட்டி உருட்டி இவர்கள் மூவரையும் பார்த்தார் ஹெட்மாஸ்டர்.

கதயக் கேட்டு முடிச்சிட்டு, சார், சக்கரியாவுடைய அந்தத் துண்டு பேப்பரை வாங்கி வாசிக்க ஆரம்பித்தார். ராஜேஷ் உதடு கண்ட்ரோல் இல்லாமல் போய்விட்டது. ஹெட்மாஸ்டெரிடம் ஒரு சட்டம் உண்டு. அடிக்கிறதுக்கு முன்னாடி யாரும் அழக்கூடாது. அந்த பேப்பரையும் சக்கரியாவையும் மாறி மாறிப் பார்த்தார். “ ஆருல இத எழுதினது?”. சக்கரியா தயக்கமே இல்லாமல்”, நாந்தான் என்றான்”. எதித்து பேசிட்டான் , அடி உறுதி என்று அவர்கள் நினைத்தபோது, யாருமெ எதிர் பார்க்காத மாதிரி, சார் அவனைத் தோளில் தட்டிக், கட்டிப் பிடிச்சிகிட்டார். இப்பொழுது பாஸ்கருக்கு தன்னுடையஉதடு ஆடுவதாய் தோன்றியது.

”லேய், வந்துட்டான் பேர எழுதிக் கிட்டு . அவன் கவித எழுதிருக்கான் . அவனை பாராட்டறத விட்டுட்டு. போங்கலெ” என்று பாஸ்கரையும் ராஜேஷையும் விரட்டி விட்டார். ராஜேஷுக்கு அடி விழாத அதிர்ச்சியில் எதுவுமே புரியல்ல. ஆனால் சார் விரட்டும் போது, பாஸ்கரைப் பார்த்து தான் சொன்னார் என்பதில் அவனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. இன்னைக்கு சாயந்திரம் கண்டிப்பா இதத் தெருவில சொல்லுவான், அவ்ள பேரும் சிரிப்பான் என பாஸ்கருக்கு நன்றாகத் தெரியும்.

திரும்பி க்ளாஸுக்கு போகும் போது, ராஜேஷ் நாக்கத் தொட்டு கண்ணில் கண்ணீர் வரைந்து கொண்டான். பாஸ்கரைப் பார்த்து நக்கலா சிரிச்சான். அவனுக்கு பயங்கர அவமானமா இருந்தது.

க்ளாஸுக்குள்ளே போனதும் நடந்தத பாஸ்கர் டீச்சரிடம் ஒப்பித்தான், ”இவரு ஹெட்மாஸ்டரு, இப்படித்தான் . பின்ன பசங்க எப்பிடி உருப்படுவானுங்க” என்ற முனங்களோடு அவர் வகுப்பை எடுக்க ஆரம்பித்தார். ஆனால், சக்கரியா மட்டும் ஹெட்மாஸ்டர் ரூமிலிருந்து வரவில்லை.

அந்த பீரியடுக்கு அடுத்து இண்டெர்வல். சக்கரியா என்ன ஆனான் என்று பார்க்க பாஸ்கர், ஸ்டாலின், ராஜேஷ் மூனு பேரும் ஆஃபிஸ் ரூம் பக்கம் போனார்கள். கொஞ்ச தூரத்தில ஜாகிரும் அவர்களுடன் சேந்துகொண்டான். அவர்களால் நம்ப முடியவில்லை. சக்கரியா ஒரு மரத்துக்கு அடியில பரிச்சை அட்டைய வச்சிக்கிட்டு எதையோ எழுதிக் கிட்டிருந்தான். கிட்ட போய், ”லெய் மக்கா என்ன எழுதிற” என்று எட்டி பார்த்த ராஜேஷையும் ஸ்டாலினயும் “ போங்கல” என்று விரட்டி விட்டான் சக்கரியா.

சரி சாயந்திரம் சேர்ந்து வீட்டுக்கு போகும் போது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்கள். இதற்கிடையில் ராஜேஷுக்கு அடி வாங்கித் தர பாஸ்கர் எடுத்த முயற்சி தோற்றுப்போனதால் பாஸ்கரே வலியப் போய் ராஜேஷிடம் சேக்காப் போட்டான். சாயந்திரம் வீட்டீல் அடி தப்பியது.

மதியம் சாப்பிடும்போது சக்கரியா அவர்கள் பக்கத்தில வந்தான் . சண்டையெல்லாம் அவ்வளவுதான். ” மக்கா என்ன நடந்திச்சின்னு” கேட்டா, மிரள மிரள ஒரு கதை சொன்னான் சக்கரியா.

”அவன் பாக்கெட்டில் எழுதி வைத்திருந்தது கவிதையாம். இது போல தினம் தினம் அவன் ஒரு கவிதை எழுத வேண்டுமாம். எழுதிட்டு போய் மறக்காம ஹெட்மாஸ்டரிடம் காட்ட வேண்டுமாம்”.

ஊரில், பாஸ்கரின் வீடு லைப்ரரிக்குப் பக்கத்தில்தான் இருந்தது. அவன் வயச ஒத்த பசங்க அனைவரும் லீவு நாளையில் காலையிலெயே கதவு திறக்கிறதுக்கு முன்னாடியே லைப்ரரிக்கு போயிருவார்கள். அதுவும், அம்புலிமாமா, வந்திருச்சினா கேக்கவே வேண்டாம். அந்த பள்ளிகூடத்தில பார்க்கிற அதே கும்பல்தான் லைப்ரரியிலயும் கிடக்கும். பாஸ்கர்,மந்திரம், ராஜேஷ் , ஸ்டாலின், ஜாகிர், முத்துக்குமார் மற்றும் வேறு சில நண்பர்கள் லைப்ரரியில இருப்பர்கள் . ஆனால், சக்கரியாவ அந்த ஏரியாவிலேயே பாத்ததில்ல. ரேங்கும் அப்பிடித்தான் வாங்குவான். பின்ன எப்பிடி. சக்கரியா ஒரே நாளுல மிகப் பெரிய கவிஞன் ஆனான். அவர்களுக்கு அந்த வயசுக்கு இது எதுவுமே புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது . ”இனி அவர்கள் எல்லோரும் சக்கரியாவுக்கு அடிமை “. என்று.

சக்கரியாவும் சாதாரணமான ஆள் இல்ல. தினம் தினம் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டான். அவனுடைய அப்பா ஊரில் ஆர்ட்ஸ் கம்பனி வைத்திருந்தார். போர்ட் எழுதுவது, விளம்பரப் படம் வரைவது என்று அவர் ரொம்ப பிஸியான ஆளு. சக்கரியாவும் நல்லா படம் வரைவான், கையெழுத்தும் சூப்பரா இருக்கும்.

பள்ளிக்கூடமே சக்கரியாவ ஆஸ்தானக் கவிஞனைப் போல் பார்த்தது. இதில் கொடுமை என்னவென்றால் சக்கரிய்யாக் கவிஞன் ஆனக் கதையில் பாஸ்கரின் பங்கும் சிரிப்புக்கிடையில் செய்தியாகத் திரிந்ததுதான். இதற்கிடையில், சக்கரியா எழுதிய ஆட்டுக்குட்டி, ஆலமரம் போன்ற கவிதைகள் அவனைப் புகழின் உச்சியில் கொண்டு வைத்தது. பொம்பளப் பிள்ளைங்க கூட சக்கரியாவ மரியாதையாய் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தக் கால கட்டத்தில்தான், அந்த வாரப் பத்திரிகை வேறு, அட்டைப்படம் போட்டு அதற்கு கவிதை எழுதும் போட்டி வைத்திருந்தார்கள். ஆறாம் வகுப்பு க்ளாஸ் டீச்சர் மேடமும், அவங்க சாரும் ஒரே பள்ளிக்கூடத்தில் வேலை பார்ப்பது போல ஒரே அட்டைப்படத்திற்கு கவிதை எல்லாம் அனுப்பி வைப்பார்கள். டீச்சச்ரோ, சாரோ, ஏதோ புலிப்பட அட்டைக்கு ஆறுதல் பரிசு வாங்கியதாகக் கூட ஞாபகம்.

பள்ளியின் ஹெட்மாஸ்டர் ஒன்னும் சாதாரணமான ஆள் இல்ல. தமிழ் பண்டிட். எம். ஏ படிச்சிருந்தாரு. அவரு பேசுரதே கவிதையாக இருக்கும். பட்டிமன்றம் எல்லாம் பேசுவாரு. அது கூட இன்னும் ரெண்டு ஆசிரியர்கள், அப்பொழுது மெதுவாக ஆரம்பித்த ஆன்மீக இயக்கத்தில் சேர்ந்து கூட்டங்களில் பேசுவதும் எழுதுவதுமாக இருந்தார்கள். இவர்கள் எல்லோருமே ரகசியமாக அந்த வாரப் பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு கவிதை எழுதி அனுப்பிக் கொண்டிருதார்கள். இதில் புனைப்பெயர் வேறு. ஒருவர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், என்பதால் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்தே எகப்பட்ட கவிதைகள் அனுப்பப் பட்டன. அந்தப் போஸ்ட் மேன் பாஸ்கரின் சொந்தக்காரரு , போட்ட போஸ்ட் கார்டு எல்லாம் திரும்பிவரும்போது சிரிச்சிக்கிட்டே இதயெல்லாம் சொல்லுவாரு.

இதற்கிடையில், கவிதைப் போதயில திரிந்த நம்ம சக்கரியாவ ஹெட்மாஸ்டெர் கூப்பிட்டு அந்த வார அட்டைப்படத்திற்கு, கவிதை எழுதி அனுப்ப சொன்னாரு. சக்கரியாவும் ஒருவழியாய் சம்மதித்தான்.

இப்பொழுதுதான் பாஸ்கர், ராஜேஷ் எல்லோரும் வெகுண்டெழுந்தார்கள். ஆனாலும் ராஜேஷ் தனக்கு ஒரு அத்தப் பையனில்லையா. எப்பொழுதும் பாஸ்கர் கூடத்தான் நிற்பான். ”நம்ம சக்கரியாவிடம் தோற்பதா”. முடிவெடுத்தார்கள் . நாமளும் கவிதை எழுதுவது என்று. ஏற்கனவே லைப்ரரி அவர்களுக்கு வீடு மாதிரிதான் , இப்பொ அங்கேயே படுக்கைய போட்டார்கள்.

சின்ன சின்ன மாற்றங்களுடன் கண்ணதாசனைக் காப்பியடிச்சு. கொஞ்ச நாள் போனப்போ வாலி, வைரமுத்து. இப்பிடியே போய் சக்கரியாவ தோக்கடிக்கும் முயற்சியில், சின்ன வயசிலெயெ வெறி கொண்ட கவிஞனாகி விட்டார்கள்.

பாஸ்கர் வீட்டுக்குத் தெரியாம கவிதை நோட்டா வாங்கி குமித்தான். ஆனாலும் பாவம் அதை யாரிடமும் சொல்ல முடியவில்லை. சக்கரியாவின் ஆளுமை அப்படிப்பட்டது. பின்னாளில், ஹைஸ்கூலில் அவனது பள்ளித் தோழர்கள் அவனைக் கவிஞன் என்று அழைத்தார்கள். நடிகைகளின் படத்திற்கெல்லம் கவிதை எழுத வேண்டியக் கட்டாயம் இருந்தது. இதில் நண்பர்கள் தெரியாமல் செய்யும் காதலுக்கெல்லாம் கவிதையைக் கடனாக கொடுக்கவெண்டும்.

ஒரு சில போட்டிகளில் வீட்டிற்குத் தெரியாமல் பங்கெடுத்து பரிசு வாங்கியதும் உண்டு. அப்பாவிற்கு மார்க்தான் எடுக்கனும். தன்னுடைய அண்ணன், அக்கா மாதிரி நல்லா படிக்கனும் என்பதில்தான் அக்கறை. இந்தக் கவிதையால, பாஸ்கருக்கு பத்து, பன்னிரெண்டாம் வகுப்பில மார்க் போனதுதான் மிச்சம். அப்பா, அண்ணன்மார்களுடைய ஐஐடி, ஜிப்மர் கனவு தர்ந்தது. +2 ரிசல்ட் அன்று கவிஞர் பாஸ்கர் வாங்கிய அடி சொல்லி மாளாது.

அப்புறம் ஏதோ சிபாரிசில் கல்லூரியில் சேர்ந்தான் பாஸ்கர். கல்லூரி, கலாட்டாக்கள். கல்லூரியில் பாஸ்கர் கவிதையாகவே வாழ்ந்தான் என்றே சொல்லலாம். போட்டிகள்,பரிசுகள், கல்லூரி மகசின் எடிட்டர் குழு, ஆசிரியர் குழு. பிரின்சிபாலுக்கு பிடித்த மாணவன் என்பதால் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனை “தாம்பாளம்” என்று அழைத்தார்கள்.

இதற்கிடையில் இன்று பிரபலமாய் உள்ள எழுத்தாளர் ஒருவருடன் சேர்ந்து அந்த நாட்களிலேயே மாதாந்தரி ஒன்று ஆரம்பித்தார்கள். என்ன ரெண்டு மாசம் மெஸ் ஃபீஸ் கட்டல. இப்படி எல்லாம் தன் கவிதையைத் தேடி திரிந்துவிட்டு ,மேலும் படித்து, தமக்கான வேலையைத் தேடி ஒரு மாதிரி நல்ல சம்பளத்தில் செட்டில் ஆகிவிட்டான். கவிதையும் கதையும் அவனோடு கோவிச்சுகிட்டு அவன விட்டு போயிருச்சு.

பாஸ்கராவது ஏதோ எங்கேயோ, எப்பொழுதாவது தலைப்புக்காவது, அட்டைப்படக் கவிதை போல கதை, கவிதை எழுதுவான் என்றாவது தெரியும். ராஜேஷ் அப்படி இல்ல. எல்.ஐ.சியில் வேலைப் பார்த்தான் . நல்ல வாலிபால் ப்ளேயர். பாம்பு மாதிரி சீறிக்கிட்டு அவன் அடிக்கிற ஒவ்வொரு ஸாட்டுக்கும் பயங்கரமான கைதட்டல் கிடைக்கும். நேசனல் கூட ஆடியிருக்கான். பின்னாளில், ஒரு முறை பாஸ்கர் அவனுக்கு கவிதையின் கதையினை கூறினான். ராஜேஷ் ஞாபகம் இருந்தது போலக் கூடக் காட்டிக்கொள்ளவில்லை.

பாஸ்கருக்காக, எல்லாவற்றையும் ரசிப்பது போல வெறுமனே சிரித்து வைத்தான். பாவம், ஒரு அக்சிடெண்ட்ல இறந்தும் போனான் மாப்ளெ. பாஸ்கர் வெளியூர் சென்று அப்படியே வேலை அது இது என்று செட்டில் ஆகி விட்டதால், ஊரில் உள்ள சக்கரியாவும் அவனது கவிதை குறித்தும் அவனுக்கு எதுவும் தெரியாது. இந்த மனசடங்கு காலம் எல்லாவற்றையும் கிளறியது. ஒருவேளை சக்கரியா இப்பொழுதும் கவிதை எழுதலாம். பாஸ்கரைப் போல பல கவிஞர்களை!!! உருவாக்கியிருக்கலாம்.

இந்த முறை பங்குனி உத்திரத்துக்கு, ஊருக்குப் போனால் சக்கரியாவையும், அவனது கவிதையையும் தேடவேண்டும் என நினத்தான் பாஸ்கர்.

நன்றியுடன் மாப்பிள்ளை ராஜேஷுக்கும், கவிஞன் சக்கரியாவிற்கும்.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
M.Saji
M.Saji
1 year ago

Nostalgic poem. The minute details of Bhaskar, headmaster and sakkariya realistic and vibrating. This poem is a microcosm of late 1960s born nature bound humble vagabonds like we people. For us even serial light was a source of admiration and fulfillment. V are like Palmyras in the midst of sufferings and don’t complain about silly things. I’m our days parents beat more than the teachers. Very often they indulge in attacking us. “LIC friend is like a snake ” . U said. Even now I run away by seeing my LIC friend bcas he insists on taking POLICY.

M.Saji
M.Saji
1 year ago

Nostalgic poem. The minute details of Bhaskar, headmaster, sakkariya all realistic and vibrating. They resemble like the characters of film maker mahendran. This poem is a microcosm of late 1960s born nature bound humble vagabonds like we people. For us even serial light was a source of admiration and fulfillment. V are like Palmyras in the midst of sufferings and don’t complain for silly things. In our days parents beat more than the teachers . Very often parents and teachers indulge in a conspiracy in attacking us. And we accept and obey as if it is a divine order. May be cas of this v don’t succumb. “LIC friend is like a snake “. U said. True . Even now I run away by seeing my LIC friends, like running by seeing a snake. Becas they insist me on talking policy. POLICE and POLICY are alike

Eube Blossom
Eube Blossom
1 year ago

Nostalgic story.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092531
Users Today : 5
Total Users : 92531
Views Today : 7
Total views : 410194
Who's Online : 0
Your IP Address : 3.133.121.160

Archives (முந்தைய செய்திகள்)