Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நீங்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகலாம் (தொடர்- 4)

01 Oct 2023 10:20 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures IAS-04

S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)

(4) போட்டியாளருக்கு உகந்த இன்றைய சூழல்

    ஐ.ஏ.எஸ்,.ஐ.பி.எஸ். மற்றும் மத்திய அரசின் உயர்பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்து இளைஞர்கள் குறைந்த எண்ணிக்கையில் வெற்றிகின்றனர் என்பதே தற்போதைய நிலை, இதற்கு அறிஞர் பெருமக்களும், அரசியலைச் சார்ந்தோரும் பற்பல காரணங்களை கூறுகின்றனர். தமிழக மாணவர்களின் சிந்தனைத் திறன் குறைவு என்று சினி குறை கூறுகின்றனர். தமிழகத்தினருக்கு இந்தி மொழி தெரியாதிருப்பது ஒரு பெரும் குறை என்று சிலர் எண்ணுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றாலே அரசியல் காரணகளுக்காக உயர்பதவிக்கு தேர்ந்தெடுப்பதில்லை  என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. தமிழக கல்வியின்தரம் குறைவு என்றுகூடப்பலர் கூறுவதைக் கேட்கலாம்.

    தமிழக மாணக்கர்களின் சிந்தனைத் திறன் குறைவு என்று கூறுவது அபத்தமான கூற்றே. காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகள் படைத்துப்  பண்டைக் காலத்திலேயே மேம்பாடான வாழ்க்கை நெறி அமைத்து  வாழ்ந்தவர்களுக்கு சிந்தனைத் திறன் குறைவாக இருக்கும் என்பது அறிவுக்குப் பொருத்தமில்லாத சுருத்து. ஐ.ஐ.டி மற்றும் தொழில்நுட்பத் தேர்வுகளில் அகில இந்திய அளவில் தற்போதும் பெரும்பாலும் தமிழக மாணவர்களே முன்னணியில் உள்ளனர். அறிவுத் திறன் கொண்ட பல தமிழக மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் பற்றிச் சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதே பெரும் குறையாக உள்ளது.

    இந்தி  மொழி  மத்திய அரசின் ஆட்சி மொழியாக உள்ளது. இம்மொழி தமிழகப் பள்ளிகளில் போதிக்கப்படுவதில்லை. எனவேதான் தமிழகத்தது இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என்பது சிலரின் கருத்து. இத்தேர்வில் வெற்றிபெற இந்திமொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. தேர்வுக்கான வினாத்தாள்கள் இந்தியில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருக்கும். ஆங்கிலம் தவிர இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவு ஏற்றுக்கொண்டுள்ள எல்லா  மொழிகளிலும்  விடைகள் எழுதவும் வாய்ப்புள்ளது. தமிழும் அவ்வாறு ஏற்றுக்கொள்ளப் பெற்றிருப்பதால் நாம் விரும்பினால் நமது தாய் மொழியான தமிழில் விடைகள் எழுதலாம். தமிழில் தேர்வு எழுதியிருந்தால் தம் விருப்பத்திற்கு ஏற்ப தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ நேர்முகத்தேர்வு அமையும். எனவே, இந்தியொழி தெரியாதது ஒரு குறையாகக் கொள்ள வேண்டாம்.

    அரசியல் காரணங்களுக்காகத் தமிழகத்து இளைஞர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற கூற்றிலும் உண்மை இல்லை. எண்ணிக்கையில் கூடுதல் குறைவு இருப்பினும், பல ஆண்டுகளாக தமிழக மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர். பாடத்திட்டம் அறிந்து சரியான அணுகுமுறையுடன் விடாமுயற்சி செய்து பயிலும் போட்டியாளர்கள் இத்தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்பதே உண்மை நிலை. வெற்றி பெறும் எண்ணிக்கை குறைந்துவிட்டால் அதற்கு அரசியல் சாயம் பூசுவது சரியன்று.

    தமிழகக் கல்வியின் தரம் குறைவு என்று கூறினால் இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களின் கல்வியின் தரம் என்ன? இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களைவிடத் தமிழகக் கல்வியின் தரம் குறைவு?  எந்தெந்த வகையில் எந்த அளவு குறைவு? என்பன போன்ற வினாக்கள் எழுகின்றன. இதற்கு தெளிவாக விடை கூறுதல் இயலாது. சிந்தித்துப் பார்த்தால் தமிழக இளைஞர்கள் இத்தேர்வில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாமல் இருப்பதற்கு வேறு பல காரணங்கள் கூறமுடியும் என்று தோன்றுகிறது.

    பொதுவாகத் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சிவில் சர்வீஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பன பி.ஏ. எம்.ஏ. போலப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் என்று எண்ணுவோர் பலர். இவ்வாறான நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் குறைவு. விரும்பினாலும் அதற்காக முழுமையாக உழைப்பவர்கள் குறைவு. உழைத்தாலும் சரியான வழிகாட்டுதல் பெற்று வெற்றி பெறுபவர்கள் குறைவு.

    பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோர்களால் தீர்மானிக்கப்படுகிறது. இப்பெற்றோர்கள் பலரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளைத் தம் பிள்ளைகளால் பெறமுடியாது என்று முதலிலேயே முழுமையாக நம்பிவிடுகின்றனர். எனவே, இத்தேர்வுகள் எழுதுவது பற்றி பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டுவது இல்லை. இத்தேர்வு பற்றிய விழிப்புணர்வைச் சில மாணவர்கள் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு ஆர்வமூட்டி அவர்களது உழைப்புக்கு முழு ஆதரவு வழங்கும் பெற்றோர்கள் தமிழகத்தில் குறைவாகவே உள்ளனர்.

    தமிழகப் பள்ளி மாணவர்கள் பலருக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு. இத்தேர்வு பற்றி அறியவரும் மாணவர்கள்கூடத் தமது கல்லூரிப் படிப்பை முடிக்கும் தறுவாயில்தான் அந்த விழிப்புணர்வைப் பெறுகிறார்கள். இதனாலேயே எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் +2  பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுப் பத்திரிக்கைகளில் பேட்டி அளிக்கும் பள்ளி மாணவர்கள் பலரும் தங்களின் எதிர்கால லட்சியம் பற்றிக் கேட்டால் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும்மென்றோ, ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டுமென்றோ கூறுவதில்லை. இவர்களுக்கெல்லாம் சிறுவயதிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தால் அதனையே லட்சியமாகக் கொண்டு உழைத்துச் சிறப்பான வெற்றி பெற்று மிக உயர்ந்த பணியைப் பெற்றிருக்க முடியும்.

    சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பம் செய்யும் ஒரு அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வு. முந்தைய காலங்களில் செய்தித்தாள்களில் இத்தேர்வு குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. அந்தநிலை மாறி, தற்போது பத்திரிக்கைகளில் தேர்வுகள் பற்றிய செய்திகள் வருவதும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பலரையும் பேட்டி கண்டு தெரிவிக்கும் செய்திகள் வருவதும் அதிகமாகியுள்ளன. அண்மைக் காலமாக சமூக வலைதளங்களிலும் சிவில் சர்வீஸ் தேர்வு பற்றிய தகவல்கள் வருவதால் பலருக்கும் செய்தி சென்று சேர்கிறது; சிவில் சர்வீஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வும் அதிகமாக வருகிறது. ஆயினும், மருத்துவம், ஐஐடி, போன்ற தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்கு பலரும் முனைப்புடன் முயற்சி செய்வது போல், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பலரும் முயற்சி செய்வதில்லை என்பதே உண்மை.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி வழங்கும் பயிற்சி சிறப்புமிக்க மையங்கள் என்றால் டெல்லியில் மட்டுமே இயங்கி வரும் நிலை இருந்தது. அந்த நிலையிலும் பல்வேறு மாற்றங்களை காணமுடிகிறது. டெல்லியில் இயங்கும் சிறப்புமிக்க பயிற்சி மையங்களின் கிளைகள் சென்னையிலும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் பல்வேறு பயிற்சி மையங்கள் ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கும் நிலை தற்போது உள்ளது. மாநில அரசும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. இவையாவற்றின் மூலமும் பலருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்யும் நடைமுறை தெரிந்திருக்கிறது; போட்டியிட்டு படிக்கக் கூடிய வாய்ப்பும் அதிகரித்துள்ளது. ஆயினும் தமிழகத்திலிருந்து போட்டியாளர்கள் வெற்றிபெறும் எண்ணிக்கை குறைவாகவே தொடர்கிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்னால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்யும் போட்டியாளர்கள் தமக்கு தேவையான புத்தகங்கள் பற்றிய விபரம் கிடைப்பது கடினமாக இருந்தது. விபரம் தெரிந்திருந்தாலும், புத்தகம் வாங்குவதற்கு கால தாமதம் மற்றும் பொருட்செலவு அதிகம் இருந்தது. மேலும் இத்தேர்வுக்கு தயார் செய்வோரோ வெற்றி பெற்றோரோ அதிகம் இல்லாத நிலையில், தாம் எவ்வாறு இந்த போட்டி தேர்வுக்கு தயார் செய்தால் உறுதியான வெற்றி பெறமுடியும் என்ற திட்டம் வகுத்து படிப்பதில் பல இடர்பாடுகள் இருந்தன. இன்று அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. சமூக ஊடகங்களில் இத்தேர்வில் வெற்றி பெற்றோர் பலரும் தமது அனுபவ பட்டறிவினை பகிர்ந்திருக்கிறார்கள். தேர்வுக்குப் பயன்படும் புத்தக விபரங்கள், தேர்வுக்கு தயார் செய்ய உதவும் வியூகத் திட்டம், போன்றவை அனைவரும் அறியும் வகையில் கிடைக்கிறது. பயன்படும் புத்தகங்கள் பலவும் வலைதலங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு போட்டியாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து வாசிக்கும் நிலமையும் தற்போது வந்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு பல லட்சம் பேர் போட்டியிடக்கூடிய தேர்வாக இருப்பினும் தேர்வுக்கு தயார் செய்ய விரும்பும் போட்டியாளர்கள் தமக்கு தேவையான அனைத்து விபரங்களும் தொடர் முயற்சியின் மூலம் கிடைக்கும் வாய்ப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ளது என்பது உண்மை.

    அடுத்து வரும் அத்தியாயத்தில், ஐ.ஏ.எஸ். உட்பட பல உயர் பணிகளுக்கான சிவில் சர்விஸ் தேர்வு முறை பற்றியும், அதில் கலந்து கொள்வோருக்கான தகுதிகள் பற்றியும் காண்போம்.
You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 5
Total views : 410192
Who's Online : 0
Your IP Address : 3.149.251.154

Archives (முந்தைய செய்திகள்)