20 Apr 2020 6:26 pmFeatured

தினத்தந்தி நாளிதழில் இன்று வெளியான கேலிச்சித்திரம் பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு வாசகர்களும், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தினத்தந்தியின் இந்தச் செயலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தினத்தந்தி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு :
“தினத்தந்தி” நாளிதழில் இன்று வெளியாகியுள்ள கார்ட்டூனில், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலையின் தலையை மறைத்து, கொரோனா வைரஸ் சித்திரத்தை வரைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர்சூட்டி, இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு கண்ட பேரறிஞர் அண்ணாவைப் பெருமைப்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட சிலையை, சிறுமைப்படுத்தும் இத்தகைய கார்ட்டூனை பாரம்பரியமிக்க தினத்தந்தி நிர்வாகம் அனுமதித்திருப்பது வேதனைக்குரியதாகும்.
“வெல்க தமிழ்” என்று இலச்சினையில் வைத்துக் கொண்டு, தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்குக் காரணமான பேரறிஞர் அண்ணா அவர்களைக் கொச்சைப்படுத்தும் கார்ட்டூனை வெளியிட்டிருப்பது தினத்தந்திக்குச் சிறிதும் சிறப்பு சேர்க்காது!
தினத்தந்தியைத் தோற்றுவித்த அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களைக் கவுரப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. கார்ட்டூன் வரைந்தவர் மூளையிலும், தினத்தந்தியின் மனதிலும் கொரோனா தொற்று புகுந்து விட்டதோ என்றுதான், கார்ட்டூனைப் பார்ப்போர் ஐயுறுவர்!
மேலும், 19ம் தேதி வெளியான கருத்துப்படத்திலும், களங்கம் கற்பிக்கும் எண்ணத்துடன் கழகத்தின் பெயர் திரிக்கப்பட்டு, கழக வரலாற்றையே அறியாத ஒருவரால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது.
கார்ட்டூன், கருத்துப்படம், கேலிச்சித்திரம் வரைய இருக்கும் உரிமையை நான் மறுக்கவில்லை; அவை அடுத்தவரைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது; யாரையும் கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது; எவரையும் அவமானப்படுத்துவதாகவும் இருக்கக்கூடாது.
நான் சுட்டிக்காட்டிய இரண்டும் இதழியல் அறத்துக்கு உட்பட்டதல்ல!
கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அது ஒருவழிப்பாதையாகவும் பொறுப்பற்றதனமாகவும் போய்விடக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைவரும் இதை நினைவில் கொண்டு, இதழியல் பண்பாட்டினைப் பாதுகாத்திட வேண்டும் என விரும்புகிறேன்.”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






Users Today : 15
Total Users : 105749
Views Today : 22
Total views : 433263
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90