Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அண்ணல் காந்தி

02 Oct 2020 1:21 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

கவியரங்க கவிதை
-கவிஞர் அண்ணாகண்ணன்

காந்தியை விரும்புகிறார்கள் மாணவர்கள்
அவர் பிறந்த நாளில்
விடுமுறை கிடைப்பதால்.

காந்தியை விரும்புகிறார்கள் மக்கள்
அவர்
ரூபாய் நோட்டில் சிரிப்பதால்.

காந்தியை விரும்புகின்றன கட்சிகள்
அவர் படத்தைக் காட்டி
அரசியம் ஆதாயம் பெற முடிவதால்.

பள்ளியில் மாறுவேடப் போட்டி.
காந்தி வேடம் அணிந்த மாணவனுக்கு
முதல் பரிசு.
காந்தி வேடம் அணிபவர்களுக்குத்தான்
பரிசுகள் கிடைக்கின்றன.

பாடத் திட்டங்களில் காந்தியின் வாழ்க்கை
தவறாமல் இடம்பெறுகிறது.
அதை மனப்பாடம் செய்து,
மதிப்பெண்கள் வாங்குகிறோம்.
ஆனால்,
நாம் பாடம் பெறுவது தான் இல்லை.

நன்னடத்தைக்காகச்
சத்திய சோதனையைப் படிக்க வேண்டும் என
நீதிபதி தீர்ப்பளித்தார்.
சத்திய சோதனையைப் படிக்கிறார்கள்
நன்னடத்தை தான் வருவதில்லை.

கோட்சே காந்தியை நோக்கி மூன்று முறைகள் சுட்டான்
அத்துடன் அது முடியவில்லை
அந்தத் துப்பாக்கிச் சத்தம் இன்னும் ஓயவில்லை.
உலகில் எண்ணற்றோர்
அவரைச் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அரசே மதுக் கடைகளைத் திறந்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

நேரில் வாங்கினால்
லஞ்ச ஒழிப்புத் துறை பொறிவைத்துப் பிடிக்கிறது என்று
தெரிந்தவர் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தச் சொல்லும்
புதிய லஞ்சம் புறப்பட்டபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

Pre K.G தொடங்கி ஐ.ஐ.எம். வரை
லட்சங்களில் நன்கொடையும் கல்விக் கட்டணங்களும்
வசூலித்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

விளைநிலங்களை விற்றுவிட்டு,
வெளிநாட்டில் தட்டுக் கழுவும்போது,
விவசாயி தற்கொலை செய்துகொள்ளும்போது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

என் ஆசிரமத்தில்
உழைக்காமல் யாருக்கும் உணவு கிடையாது
என உரைத்தீர்கள்.
இலவசங்களுக்காக எங்கள் மக்கள் விழுந்தடித்து ஓடிவந்து
நெரிசலில் சிக்கி மாண்டபோது
பிதாவே
உமது மார்பில் குண்டு பாய்ந்தது.

ஒவ்வோர் ஊழலிலும் கையாடலிலும் கையூட்டிலும்
காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர், நேரத்துக்கு நேரம்
சட்டம் வளைகிறது.
செங்கோல் வளைகிறது
நீதி வளைகிறது.
காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

ஜாலியன் வாலாபாக்கில் பாய்ந்த குண்டுகளை விட
அதிகமான குண்டுகள்
காந்தியின் ஒற்றை மார்பைத் துளைக்கின்றன.

இரண்டாம் உலகப் போரில் வீசிய குண்டுகளை விட
அதிகமான குண்டுகள்
காந்தியின் பொன்னுடலை மீண்டும் மீண்டும் சிதைக்கின்றன.

ஆனால்,
காந்தியின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை
அவரின் தத்துவம் இன்னும் தோற்றுவிடவில்லை.
என் வாழ்வே நான் விடுக்கும் செய்தி
என்ற அவரின் வாழ்விலிருந்து
நாம் பெறும் செய்திகள்
இன்னும் தொடர்கின்றன.

உண்மையும் அன்பும்
எளிமையும்
எங்கெல்லாம் ஒளி வீசுகின்றனவோ
அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்.
அவர்களுக்குள் இருந்து சிரிக்கிறார்.

ஒரு நாய்க்குட்டி என் காலை நக்கி விளையாடுகிறது
ஒரு மீன்குஞ்சு என்னை மெல்ல கடிக்கிறது
ஓர் இளங்குருவி என் தோளில் அமர்கிறது
ஒரு மொட்டு மெல்ல மலர்கிறது.
பேரமைதியிலிருந்து ஒரு மெல்லிசை பிறக்கிறது.
ஒரு கனவு மெல்ல விழித்தெழுகிறது.

எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

என்றானே பாரதி.

அந்த நன்முறைகளில் ஒன்று, காந்தியம்.
நம்மை நடத்தும் தலைவர் காந்தி.
அண்ணல் வழிநடப்போம்
அன்பின் மொழிபடிப்போம்
அகத்தின் விழிதிறப்போம்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092535
Users Today : 2
Total Users : 92535
Views Today : 3
Total views : 410203
Who's Online : 0
Your IP Address : 18.222.119.148

Archives (முந்தைய செய்திகள்)