10 Jan 2020 8:10 amFeatured


என் சோகங்கள் அழ...
கவலைகள் மறக்க...
தளர்ந்த தோள் சாய...
உனை தந்தாய்..!
எனை எந்தி
தாங்கும் இன்பமே...
நான் விரும்பி
விழுந்த இடமே...
எனை மறந்து
உறங்கியதும்
உன்னோடுதான்...
மீண்டும் எனக்கந்த
உறக்கம் தா
கண்மணியே
கட்டிலே...

இருவரும்
ஒன்றாகத்தான்
நனைந்தோம்...
உன்னை
இறுக்க பிடித்தபடியே
வருவேன் நான்...
என் ரேகை
கைப்பிடிக்குள் நீ...
உன் தேக
தோகைக்குள் நான்...
என் பாதங்கள் நனைய
உனக்கு உடம்பே
சிலிர்க்கும்...
இருந்தாலும் உன்னை
ஒருநாளும்
என் அறையினுள்
அனுமதித்ததில்லை
குடையே...

இதமான குளிருக்கு
நீ வேண்டும்...
இறங்கும்
உன் சூட்டில்
நான் கிறங்குவேன்...
அதிகாலை விழித்ததும்
உனைத்தேடும்
என் மனம்...
நீ இல்லா மழையை
நான் ரசித்ததில்லை...
தினமும்
நீ வேண்டும்
என் காலைத் தேநீரே...

நான் நீட்டிய
பக்கமெல்லாம்
எனக்கு சேவை செய்வாய்...
என் எண்ணங்களை பிரதிபலிப்பாய்...
நீ தந்த கருத்துகளே
எனது அரங்கேற்றம்...
உனையன்றி வேறுயாரும்
என் தனிமையை
பகிர்ந்து கொண்டதில்லை...
உன்னால்
எழுதிக் கொண்டிருக்கிறேன் என்னை என்பேனா
என் பேனா...

ஒரு நாளும் நீ
பொய் காட்டியதுமில்லை...
மெய் கூட்டியதுமில்லை...
என்னை உள்வாங்கும் நீ.,
நீயல்ல அது நான்...
நான் பார்க்கா அழகை
பார்த்தெடுக்க வேண்டும் நீ...
நான் காணா இடமெல்லாம்
கோர்த்தெடுக்க
வேண்டும் நீ...
எனை மெருகூட்டி
எழில் காட்டும்
நீ என் கண்ணாடி..!

நான் நேசித்த அளவிற்கு
நீ நேசிக்கவில்லை
என்னை...
இறுதிவரை இருந்தாய்
இறுதியில் வரவில்லை
என்னோடு நீ...
பணம்...!!






Users Today : 23
Total Users : 105725
Views Today : 30
Total views : 433231
Who's Online : 0
Your IP Address : 18.97.14.85